search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைகாசி விசாகம்"

    • முருகப் பெருமானுக்கு 6 விளக்குகள் ஏற்றி வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்.
    • ஆறுமுகனின் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    'சட்டியில் இருந்தால் தான், அகப்பையில் வரும்' என்று ஒரு பழமொழியை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் உண்மையில் இது அப்படி அல்ல! 'சஷ்டியில் இருந்தால் தான், அகப்பையில் வரும்' என்பது தான் சரியான உச்சரிப்பு ஆகும்.

    அதாவது சஷ்டி திதியில் விரதம் இருப்பவர்களுக்கு கருப்பை நிறையும், குழந்தை பேறு உண்டாகும் என்பது நியதி! இப்படி குழந்தை பாக்கியத்தையும், சொந்த வீடு அமையும் யோகத்தையும் கொடுக்கும் முருகப் பெருமானுக்கு 6 விளக்குகள் ஏற்றி வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

    அறுபடை வீடு கொண்ட முருகனுக்கு ஆறு விளக்குகள் ஏற்றி வழிபடுவதால் ஆறுமுகனின் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    முருகனுக்கு செய்யப்படும் எந்த ஒரு விஷயத்தையும் ஆறாக செய்வது, நம் வேண்டுதல்களை எளிதாக நிறைவேற்றிக் கொள்வதற்கு ஒரு வழிமுறையாகும்.

    கார்த்திகை மாதத்தில் வளர்பிறையில் வரக்கூடிய மகா சஷ்டி விரத நாளில் 6 நாட்கள் தொடர்ந்து விரதத்தை கடைபிடிப்பது வழக்கம்.

    இந்நாட்களில் முருகனின் மந்திரங்களை உச்சரித்து, முருகனை நினைத்து உண்ணாமல் நோன்பு இருந்து குழந்தைக்காக பெண்கள் விரதமிருந்து வழிபடுவது வழக்கம்.

    சஷ்டி நாட்களில் மட்டும் அல்லாமல், பொதுவாக செவ்வாய்க் கிழமைகளில் முருகனுக்கு விரதமிருந்து முருகனுடைய திருவிளையாடல்களை படித்து, திருப்புகழ் பாடி, கவசம் பாராயணம் செய்பவர்களுக்கு, முறையாக விரதம் இருப்பவர்களுக்கு அள்ள அள்ள குறையாத செல்வங்களை வாரி வழங்குகிறார்.

    குறிப்பாக குழந்தைப் பேறு உண்டாக வேண்டும் என்று நினைப்பவர்கள் செவ்வாய்க்கிழமையில் முருகன் படத்தை வைத்து அவருக்கு ஆறு விதமான நைவேத்தியங்கள் படைத்து, 6 புதிய அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றி, மனதார முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால் வேண்டிய வரம் வேண்டியபடி கிடைக்கும்.

    சொந்த வீடு கட்ட வேண்டும் என்கிற ஆசை உடையவர்களுக்கு செவ்வாய் பகவானுடைய அருள் தேவை. செவ்வாய் காரகத்துவம் பெற்ற வீடு பேறு அமைய, அவருடைய அதிபதியாக விளங்கும் முருகனை வழிபட வேண்டும்.

    முருகப்பெருமானுக்கு ஆறு விளக்குகள் செவ்வாய் தோறும் ஏற்றி, மனதார பிரார்த்தனை செய்து வருபவர்களுக்கு விரைவிலேயே சொந்த வீடு கட்டும் யோகம் உண்டாகும்.

    சாதாரணமாக எல்லோருடைய வீடுகளிலும், முருகனுடைய படம் நிச்சயம் இருக்கும். அந்த படத்திற்கு தம்பதியராக சேர்ந்து மாலை இட்டு, புதிய 6 அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி, முருகன் மந்திரங்களை உச்சரித்து ஒன்றாக பூஜை செய்தால் அவர்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறைந்து, மன ஒற்றுமை நிச்சயம் ஏற்படும்.

    கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும், ஒரு முறை செய்து பாருங்கள் உங்களுக்கே ஆச்சரியப்படும் விஷயங்கள் எல்லாம் நடக்கும்.

    வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு சஷ்டி திதிகளில் முருகனை இவ்வாறு வழிபட்டு வர, எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேறும். அது மட்டுமல்லாமல் அடிக்கடி முருகன் கோவிலுக்கு சென்று அவரை தரிசனம் செய்து வருபவர்களுக்கும், எண்ணற்ற நன்மைகள் நடைபெறும்.

    கலியுகத்தில் காக்கும் கடவுளாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் இந்த முருகனுக்கு பழனி என்றால் விருப்பம் தான்! அறுபடை வீடுகளில் பழனியில் இருக்கும் நவபாஷாண சிலை இன்றும் விஞ்ஞானிகள் வியக்கும் ஒரு அதிசயம் தான். எனவே வாரந்தோறும் முருகப் பெருமானுக்கு ஆறு விளக்குகள் ஏற்றி வழிபட்டு வாருங்கள், அனைத்தையும் அடையுங்கள்.

    • கார்த்திகை நட்சத்திரம் முருகனை வழிபடுவதற்கு ஏற்ற நட்சத்திரமாக மாறியது.
    • ஆடி மாதம் அனைத்து தெய்வங்களையும் வழிபட மிகவும் ஏற்ற மாதமாகும்.

    ஈரோடு மாவட்டம் கோபி பச்சைமலை முருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடிக்கிருத்திகை அன்று காலை 6.30 மணிக்கு 2 மாடுகள் 181 படிகட்டுகள் ஏறி வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    ஆடி மாதம் அம்மனுக்கு மட்டுமல்ல அனைத்து தெய்வங்களையும் வழிபட மிகவும் ஏற்ற மாதமாகும். அப்படி ஆடி மாதத்தில் வரும் சிறப்பான நாட்களில் ஒன்றாகவும், முருகப்பெருமானை வழிபடுவதற்கு ஏற்ற நாளாகவும் கருதப்படுவது ஆடிக்கிருத்திகை நாளாகும்.

    முருகப்பெருமான் அவதரித்தது விசாகம் நட்சத்திரத்தில் என்றாலும் கூட அவரை வளர்த்தெடுத்தது எல்லாம் கார்த்திகை பெண்கள் என்பதால் அவர்களை சிறப்பிக்கும் வகையில் கார்த்திகை நட்சத்திரம் முருகப்பெருமானை வழிபடுவதற்கு ஏற்ற நட்சத்திரமாக மாறியது.

    மாதம்தோறும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும் தை, கார்த்திகை, ஆடி மாதங்களில் வரும் கார்த்திகை நட்சத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக போற்றப்படுகிறது. கார்த்திகை விரதத்தன்று கந்தசஷ்டி பாராயணம் செய்து, மறுநாள் ரோகிணி நட்சத்திரத்தன்று காலையில் குளித்து விட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் செய்து விட்டு, பிறகு விரதத்தை நிறைவு செய்வது சிறப்பானதாகும்.

    கந்தசஷ்டி கவசத்துடன் கந்த குரு கவசம், திருப்புகழ் படிப்பது மிகப்பெரிய புண்ணியத்தை தரும் என்ற நம்பிக்கையும் உள்ளது. திருமணம் ஆகாதவர்கள் ஆடி கிருத்திகை நாளில் திருப்புகழில் உள்ள பாடலை பாராயணம் செய்து வழிபடுவதால் விரைவில் திருமண வரம் கூடி வரும்.

    பகல் முழுவதும் உப்பில்லாமல் உணவு எடுத்துக் கொண்டு, மாலையில் அருகில் உள்ள முருகப்பெருமான் கோவிலுக்கு சென்றும் விரதத்தை நிறைவு செய்வது சிறப்பு.

    • அரோகரா கோஷங்கள் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர்.
    • பக்தர்கள் கூட்டத்தால் கோவில் வளாகமே நிரம்பி வழிகிறது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா, வசந்த திருவிழாவாக கடந்த 13-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 10-ம் நாளான இன்று விசாகத் திருவிழாவுடன் நிறைவு பெறுகிறது.

    வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மற்றும் தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சேர்கிறார். அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனையாகி சுவாமி வசந்த மண்டபத்தை 11 முறை சுற்றி வருகிறார். அங்கு முக்கிய நிகழ்ச்சியான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடக்கிறது.

    தொடர்ந்து மகா தீபாராதனைக்குப் பின் சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    வைகாசி விசாகத் திருவிழாவில் கலந்து கொள்ள கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பாத யாத்திரையாகவும், அலகு குத்தியும்,காவடி எடுத்து வந்து கடலில் புனித நீராடி அரோகரா கோஷம் முழங்கி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். அவர்கள் விண்ணதிர அரோகரா கோஷங்கள் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் பக்தர்கள் கூட்டத்தால் கோவில் வளாகமே நிரம்பி வழிகிறது.

    • நேற்று இரவே திருப்பரங்குன்றத்திற்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
    • முருகப்பெருமானுக்கு குடம் குடமாக பாலாபிஷேகம் நடைபெற்றது.

    திருப்பரங்குன்றம்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முத லாம் படை வீடாக போற் றப்படும் திருப்பரங்குன்றம் கோவிலில் கொண்டாடப் படும் விழாக்களில் வைகாசி விசாகப் பெருவிழா முக்கி யத்துவம் வாய்ந்ததாகும். இந்த ஆண்டுக்காண விசா கத்திருவிழா, கடந்த 13-ந் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.

    விழாவினை முன்னிட்டு தினமும் இரவு 7 மணிக்கு புஷ்ப அங்கி அலங்காரத்தில் முருகன்-தெய்வானையுடன் உற்சவர் சன்னதியில் இருந்து புறப்பட்டு கோவில் வளாகத்தில் அமைந்துள்ள வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு நீர் நிரப்பப்பட்ட தொட்டியின் மீது அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித் தார். 9-ம் நாளான நேற்று வசந்த உற்சவத்தின் நிறைவு விழா நடைபெற்றது.

    10-ம் நாளான இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு அதிகாலை முதலே கோவிலில் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்தனர். வெளியூர்களில் இருந்தும் நேற்று இரவே திருப்பரங்குன்றத்திற்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். காலை 5 மணிக்கு சண்முகர் சன்னதியில் உள்ள சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகமும், பாலாபிஷேகமும் நடை பெற்றது. 6 மணிக்கு கம்பத்தடி மண்டபத்தில் உள்ள விசாக கொறடு மண்டபத் தில் சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி னர்.

    அங்கு காலை முதல் மாலை வரை, பக்தர்கள் நேர்த்திக்கடனாக தலையில் வைத்து சுமந்து வந்த பாலில் முருகப்பெருமானுக்கு குடம் குடமாக பாலாபிஷேகம் நடைபெற்றது. அவ்வாறு அபிஷேகம் செய்த பால் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. பின்னர் பால் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடி, புஷ்ப காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    வைகாசி விசாகத்தை யொட்டி மதுரை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதயாத்திரையாக வந்திருந்த பக்தர்கள் திருப் பரங்குன்றம் ரத வீதிகளில் குவிந்து அரோகரா கோஷம் எழுப்பினர். பல மணிநேரம் நீண்ட வரிசையில் காத்தி ருந்து அவர்கள் சாமி தரிசனம் செய்தனர். நகரில் பல்வேறு பகுதிகளில் இருந் தும் பக்தர்கள் சாரை சாரையாக கோவிலை நோக்கி படையெடுத்தனர்.

    குறிப்பாக கோரிப்பாளை யம், சிம்மக்கல், நேதாஜி ரோடு, மாசி வீதிகள், ஆண்டாள்புரம், வசந்தநகர், பழங்காநத்தம், பைக்காரா, பசுமலை, மூலக்கரை, திரு நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையே தெரியாத அள வுக்கு பக்தர்கள் பால் குடங்களுடன் ஊர்வலமாக வந்தனர். அதிலும் குழந்தை கள் பால்குடங்களை தலை யில் சுமந்து வந்ததை வழி நெடுகிலும் நின்று பார்த்த பக்தர்கள் பரவசத்துடன் வரவேற்றனர்.

    கடந்த வாரம் அக்னி நட்சத்திர வெயில் கொளுத் திய நிலையில் சில நாட்க ளாக பெய்து வரும் கோடை மழையால் வெயிலின் தாக்கமின்றி சாலைகளில் பக்தர்கள் பாதயாத்திரை யாக கோவிலை நோக்கி சென்றனர். அதேபோல் கோவில் நிர்வாகம் சார்பில் கோவிலுக்குள் பால்குடம் எடுத்து வரும் பக்தர்களுக்கு தனி வரிசை, சுவாமி தரிச னம் செய்ய வருபவர்களுக்கு தனி வரிசை என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அனுப்பப்பட்டனர்.

    மேலும் கோவிலுக்குள் கூடுதலாக மின்விசிறி மற்றும் ஏர்கூலர் வசதிகள் செய்யப்பட்டிருந்தது. அதி காலை 6 மணி முதல் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவி லுக்கு செல்லும் வழிநெடுகி லும் சாலையின் இருபுறமும் பக்தர்களுக்கு சுடச்சுட அன்னதானம், நீர்மோர், பானகம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. ஆங் காங்கே மருத்துவம் உள் ளிட்ட அடிப்படை வசதிக ளும் செய்யப்பட்டிருந்தது.

    விழாவையொட்டி, மதுரை மற்றும் பல்வேறு பகுதியிலிருந்தும் வருகை தந்திருந்த பக்தர்கள் திருப்ப ரங்குன்றம் ரத வீதிகளில் குவிந்து விண்ணதிர அரோ கரா கோஷம் எழுப்பினர். விழாவிற்கான ஏற்பாடு களை அறங்காவலர் குழு தலைவர் சத்தியபிரியா அறங்காவலர்கள் சண்முக சுந்தரம், பொம்ம தேவன், மணி செல்வம், ராமையா, கோவில் துணை ஆணையர் சுரேஷ், மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந் தனர்.

    இதேபோல் முருகப்பெரு மானின் 6-வது படை வீடான அழகர்மலையில் அமைந்துள்ள பழமுதிர்ச் சோலை முருகன் கோவிலி லும் வைகாசி விசாக திருவிழா பக்தர்கள் வெள் ளத்தில் சிறப்பாக நடை பெற்றது. மலையடிவாரத் தில் இருந்து நூற்றுக்க ணக்கான பக்தர்கள் பால் குடம், பல்வேறு காவடிகள் எடுத்து மலைமேல் உள்ள நூபுர கங்கை புனித தீர்த்தத் தில் நீராடி பின்னர் பழ முதிர்ச்சோலை முருகன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வைகாசி விசாகத்தன்று விரதம் இருப்பதால், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கப்பெறும்.
    • விசாகத்துடன் கூடிய பவுர்ணமி அன்று முருகப்பெருமான் அவதாரம் செய்தார்.

    வைகாசி மாதம் விசாகத்துடன் கூடிய பவுர்ணமி அன்று முருகப்பெருமான் அவதாரம் செய்தார். 'முருகன்' என்றாலே 'அழகன்' என்று பொருள். ஒரு சமயம் உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டிருந்த சூரபத்மன் உள்ளிட்ட அசுரர்களை அழிப்பதற்காக, அற்புதமான ஆற்றல் மிக்க மிகப்பெரிய அவதாரம் தேவைப்பட்டது.

    தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணை திறக்க, அதில் இருந்து ஆறு நெருப்புப் பொறிகள் வெளிப்பட்டது. அது மூன்று உலகத்தையும் தகித்தது. அதை ஒருவராலும் நெருங்க முடியவில்லை.

    அந்த நேரத்தில் அக்னி பகவான் அந்த ஆறு நெருப்புப் பொறிகளையும் தன் கையில் ஏந்தினார். அக்னி பகவானின் கையைக் கூட அந்த நெருப்புப் பொறிகள் தகிக்க ஆரம்பித்தது. தாங்க முடியாத வெப்பமாய் இருந்த அந்த நெருப்புப் பொறிகளை அக்னி பகவான் சரவணப் பொய்கையில் கொண்டு வந்து சேர்த்து குளிர்வித்தார்.

    அந்த ஆறு நெருப்புப் பொறிகளும், ஆறு குழந்தைகளாக மாறின. ஆறு குழந்தைகளையும் வளர்க்க வேண்டும் அல்லவா? அதற்காக ஆறு கார்த்திகை பெண்கள், சரவணன் பொய்கையில் தோன்றிய அந்த குழந்தைகளை கையில் எடுத்தனர். ஆறு குழந்தைகளும் ஒரு குழந்தையாக மாறியது.

    ஆறுமுகம், 12 கைகள், இரண்டு கால் என்று அற்புதமான ஒளி பொருந்திய தோற்றத்துடன் முருகப்பெருமான் காட்சி அளித்தார்.

    முருகப்பெருமான் பிறந்த அந்த வைகாசி விசாகத் திருநாளை உலகமே கொண்டாடியது. ஆறு முகத்துடன் காட்சி அளித்ததால் அவருக்கு 'ஆறுமுகன்' என்று திருப்பெயர் உண்டானது. வைகாசி விசாகம் அன்று பிறந்ததால் 'விசாகன்' என்ற திருநாமமும் ஏற்பட்டது.

    முருகப்பெருமான் அவதரித்த இந்த வைகாசி விசாகத் திருநாளில் விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு வேண்டிய வரங்கள் கிடைக்கும். குழந்தை பேறு உண்டாகும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வர். சகல தோஷமும் விலகும்.

    வைகாசி விசாக தினத்தில் விரதம் இருப்பது மிகுந்த புண்ணிய பலன்களை தரும். அன்றைய தினம் அதிகாலையில் குளித்துவிட்டு, இஷ்ட தெய்வம் மற்றும் குல தெய்வத்தோடு குரு பகவானையும் மனதில் நினைத்து தியானித்து விரதத்தைத் தொடங்கலாம்.

    வீட்டின் பூஜை அறையில் உள்ள முருகப்பெருமான் படத்தை அலங்கரித்து, வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் ஆகியவற்றை நைவேத்தியம் செய்யலாம். வீட்டின் பூஜை அறையில் அமர்ந்து வேல் விருத்தம், சண்முக கவசம், கந்தகுரு கவசம், கந்த சஷ்டி கவசம் போன்றவற்றை சொல்லி முருகனை வணங்க வேண்டும்.

    வீட்டில் பூஜை செய்ய முடியாதவர்கள், அருகில் உள்ள முருகப்பெருமான் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு செய்து வரலாம். அன்றைய தினம் முழுமையான உணவருந்தாமல் இருப்பது நல்ல பலனைத் தரும்.

    முழுமையாக விரதம் இருக்க முடியாதவர்கள், வேகவைத்த உணவுகளை ஒரு வேளை மட்டும் சாப்பிடலாம். திணை மாவு, தேன், பழங்கள் போன்வற்றையும் சாப்பிடலாம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருப்பதால், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கப்பெறும்.

    • மதுரை திருமோகூர் ஸ்ரீகாளமேக பெருமாள்,
    • திருநள்ளாறு ஸ்ரீதர்பரண்யேஸ்வரர்,

    தமிழகத்தில் வைகாசி பிரம்மோற்சவம் மிக சிறப்பாக நடக்கும் தலங்கள் வருமாறு:-

    01 காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில்,

    02 திருவல்லிக்கேணி, ஸ்ரீபார்த்தசாரதி கோவில்,

    03 ஆழ்வார் திருநகரி (ஸ்ரீநம்மாழ்வாருக்குப் பிரம்மோற்சவம்),

    04 மதுராந்தகம் ஸ்ரீஏரி காத்த ராமர்,

    05 மகாபலிபுரம் ஸ்ரீஸ்தல சயன பெருமாள்,

    06 திருநாராயணபுரம் ஸ்ரீகல்யாண வெங்கடேச பெருமாள்,

    07 காஞ்சி ஸ்ரீவைகுண்ட பெருமாள்,

    08 சென்னை அமைந்தகரை ஸ்ரீபிரசன்ன வரதராஜர்,

    09 மதுரை ஸ்ரீகூடலழகர்,

    10 மதுரை திருமோகூர் ஸ்ரீகாளமேக பெருமாள்,

    11 திருநள்ளாறு ஸ்ரீதர்பரண்யேஸ்வரர்,

    12 பட்டீஸ்வரம் ஸ்ரீதேணு புரீஸ்வரர்,

    13 திருக்கண்ணங்குடி ஸ்ரீகாள ஹஸ்தீஸ்வரர்,

    14 திருப்பனையூர் ஸ்ரீசவுந்தரேஸ்வரர்,

    15 கஞ்சனூர் ஸ்ரீஅக்னி புரீஸ்வரர்,

    16 கும்பகோணம் ஸ்ரீகும்பேஸ்வரர்,

    17 திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்க சுவாமி,

    18 மயிலாடு துறை ஸ்ரீமயூரநாதர்,

    19 திருச்செங்கோடு ஸ்ரீஅர்த்த நாரீஸ்வரர்,

    20 பொள்ளாச்சி ஸ்ரீசுப்ரமணியர்,

    21 சென்னை வடபழனி ஸ்ரீதண்டாயுதபாணி,

    22 சென்னை ஸ்ரீகாளிகாம்பாாள்

    ஆகிய கோவில்களில் வைகாசி மாதத்தில் உற்சவம் சிறப்புற நடைபெறுகிறது.

    • உற்சவங்கள், ஒரேயொரு நாளிலும் முடியும். அதிக பட்சமாக 27 நாட்கள் வரையும் நீண்டிருக்கும்.
    • எனினும், பெரும்பாலான ஆலயங்களில், 9 நாட்கள் நடைபெறும் உற்சவமே நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

    கோவில்களில் நடத்தப்படும் பிரம்மோற்சவ விழாக்களில் இதுவும் ஒன்று என்பதாகவே பலரும் நினைக்கிறார்கள்.

    பெரும்பாலானவர்கள் முக்கியமான விழாக்களில் மட்டுமே கலந்து கொள்கிறார்கள்.

    மற்ற விழாக்களைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

    ஆனால், உற்சவம் என்பதே, உலக மக்கள் அனைவருக்கும் பலன் தரக்கூடிய, பலம் தரக்கூடிய முக்கியமான விழாவாகும்.

    உத்+சவம். இதில், சவம் என்பது தோற்றத்தைக் குறிக்கும். தாயின் கருவறையில் இருந்து குழந்தை வெளிவருவதை பிரசவம் என்கிறோம்.

    அதேபோல், எல்லாம் வல்ல பரம்ருபொருளின் சக்தி, ஆலயத்தின் கருவறையில் மூல மூர்த்தமாக எழுந்தருளியுள்ளது.

    அப்படி, மூல மூர்த்தமாக இருக்கிற இறைவனை உற்சவரின் திருமேனிக்கு எழுந்தருளச் செய்து, உலக நன்மைக்காக, கோவிலில் இருந்து சுவாமி வீதியுலா வருகிற வைபவமே, உற்சவம்!

    உற்சவங்கள், ஒரேயொரு நாளிலும் முடியும். அதிக பட்சமாக 27 நாட்கள் வரையும் நீண்டிருக்கும்.

    எனினும், பெரும்பாலான ஆலயங்களில், 9 நாட்கள் நடைபெறும் உற்சவமே நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

    இந்த ஒன்பது நாள் உற்சவத்தை, சவுக்கியம் என்று குறிப்பிடுவர்.

    பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வு... தீர்த்தவாரி.

    அந்த நாளில், புண்ணிய நதிகள் அனைத்தையும் தீர்த்தங்களாக ஆவாஹனம் செய்து, அனைத்து ஜீவராசிகளையும் அஸ்த்ர தேவரில் எழுந்தருளச் செய்வார்கள்.

    அப்போது, நாம் தீர்த்த நிலையில் நீராடி கரைக்கு வரும்போது, மிகச் சிலிர்ப்புடன் இறையனுபூதி கிடைக்கும் என்கிறார் மணிவாசகப் பெருமான்.

    வைகாசி மாத பிரம்மோற்சவ விழாக்களில் கலந்து கொண்டு வழிபட... இயற்கைச் சீற்றங்கள் குறையும், பசுமை கொழிக்கும்.

    உலகில் அமைதி நிலவும், குடும்பத்தில் ஒற்றுமையும் சந்தோஷமும் குடிகொள்ளும், சகல செல்வங்களும் பெருகும் என்பது ஐதீகம்!

    • விசாக நாளில் முருகனை வணங்கினால் நினைத்தது நிறைவேறும்.
    • பகை நீங்கி அன்பு பெருகும் சுகம் கிடைக்கும். தீராத வினைகளும், எதிரிகளின் தொல்லைகளும் நீங்கும்.

    வைகாசி விசாக நாளில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் படத்தைச் சுத்தம் செய்து, சந்தன குங்குமப் பொட்டு வைத்து மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.

    பின்னர் தலைவாழை இலையில், சர்க்கரைப் பொங்கல், தினைமாவு, பால், சித்ரான்னங்கள், பட்சணங்களை நைவேத்யமாகப் படைத்து குத்து விளக்கை ஏற்ற விநாயகப் பெருமானை மஞ்சளில் அல்லது பசுஞ்சாணத்தில் பிடித்து வைத்து பூஜை செய்ய வேண்டும்.

    விநாயகர் பூஜை முடிந்தபின் முருகப் பெருமானுக்குரிய நாமங்களைச் சொல்லி அர்ச்சித்து தீபம் காட்டி வழிபட வேண்டும்.

    மாலையில் அருகில் உள்ள முருகப்பெருமானின் கோவிலுக்கு சென்று வழிபட்டு விட்டு வீட்டிற்கு வந்ததும் கந்த சஷ்டி கவசம், கந்தரனுபூதி ஆகியவைகளைப் படிக்க வேண்டும். வைகாசி மாதத்தில் சூரியன் ரிஷப ராசியில் இருக்கிறார்.

    அவர் அங்கிருந்து ஏழாம் பார்வையாக விசாக நட்சத்திரத்தைப் பார்க்கிறார். விசாக நட்சத்திரத்தின் தேவதை குமரன். அதாவது முருகன்.

    சூரியன் விசாக நட்சத்திரத்தைப் பார்ப்பதன் மூலம் முருகனை வழிபடுவதாக ஐதீகம்.

    எனவேதான், சூரியன் வழிபடும் முருகப்பெருமானை அந்நாளில் விரதமிருந்து நாமும் வழிபட்டு வருகிறோம்.

    விசாக நாளில் முருகனை வணங்கினால் நினைத்தது நிறைவேறும்.

    பகை நீங்கி அன்பு பெருகும் சுகம் கிடைக்கும். தீராத வினைகளும், எதிரிகளின் தொல்லைகளும் நீங்கும்.*

    • பணங்கிழங்கும், வேர்க்கடலையும் வழியில் அதிகம் வாங்கிச் சாப்பிடுவர்.
    • தங்கள் உறவினர்களை எல்லாம் கண்டு கடற்கரையில் அமர்ந்து பேசி மகிழ்வர்.

    உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் நடக்கும் வைகாசி விசாக திருவிழா தனித் தன்மை கொண்டது.

    இதில் குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் லட்சக்கணக்கில் கலந்து கொள்வார்கள்.

    அன்றைய காலத்தில் கூண்டு வண்டிகளில் கட்டுச் சோற்றினை கட்டித்தொங்க விட்டு கூண்டின் மேல் சமையலுக்குத் தேவையான விறகு, பாத்திரங்கள், உணவுப் பொருட்கள் போன்றவற்றை ஏற்றி வைத்திருப்பார்கள்.

    அவல், மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம், அரிசிமாவு போன்றவற்றை பைகளில் வைத்திருப்பார்கள், வண்டியின் மேலும், உள்ளும் அடியிலும் வைக்கோலைக்கட்டி வைத்திருப்பார்கள்.

    அரிக்கேன் விளக்கு வண்டியின் அடியில் தொங்கும் அந்த விளக்கொளியில் குமரி மாவட்டத்தின் ஒவ்வொரு ஊரிலிருந்தும் முப்பது, நாற்பது வண்டிகள் முற்காலத்தில் உவரி விசாகத்திற்கு வந்து செல்வார்கள்.

    வழியில் கூடன்குளம் சிரட்டைப் பிள்ளையார் கோவிலுக்குச் சென்று அவரையும், சுடலைமாடனையும் மனம் உருக வணங்கி தங்கள் குறைகளை எடுத்துக்கூறி ஆறுதலைப்பெற்று அம்மனிடம் வழிபாடு செய்து தேங்காய் உடைத்து, அதில் தேங்காயை மட்டும் எடுத்துச் கொண்டு சிரட்டையை கோவிலிலேயே விட்டு விடுவர்.

    ஆலயத்தில் சுடலைமாடசுவாமியின் அருள் பெற்று மீண்டும் மக்கள் புறப்படுவர்.

    விசாகத்திற்கு முந்தைய நாள் காலைப்பொழுது புலரும் வேளையில் நாட்டாறு கடந்து பத்திரகாளியம்மன் கோவில் வந்து சேர்வார்கள்.

    அங்கே காலையில் பல் துலக்கி, அம்மனை வழிபட்டு, பதநீர் அருந்தியபின் உவரி வந்து சேர்வார்கள், முற்காலத்தில் உவரி செல்லும் வழி முழுவதும் இலவசமாக பதநீர் குடிக்க கிடைக்கும்.

    வழி நெடுக கனி வகைகளை உண்டு மகிழ்வார்கள்.

    குறிப்பாக இது கோடை காலம் மாம்பழம் அதிகம் கிடைக்கும் கால மாதலால் மாம்பழம், வாழைப்பழமும் சாப்பிடுவார்கள்.

    முற்காலத்தில் மட்டுமின்றி இன்றும் ஏராளாமான மக்கள் விசாக நேரத்தில் குமரி மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து உவரி சுயம்புநாதரை வந்து வழிபடுகின்றனர்.

    உவரி விசாகத்திற்கு வரும் மக்கள் விசாகத்தன்று அதிகாலையில் கடலில் நீராடி கடல் தங்கமாகிய கடல் மண்ணை எடுத்து சுயம்பு நாதர் ஆலயத்தின் அருகில் தலையில் சிறிய பெட்டிகளில் சுமந்து வந்து குவிப்பார்கள்.

    இதனால் தீரும் பாவ வினைகளும், நோய்களும், கஷ்டங் களும் ஏராளம்.

    செல்வங்கள் சேரும், புகழ் சேரும், கல்வி அறிவு அதிகரிக்கும்.

    நினைத்த காரியங்கள் வெற்றி அடையும் சுயம்புலிங்கத்தின் அருள் என்றும் மண் சுமந்தாருடன் நிலைத்து நிற்கும்.

    கடலில் குளித்த பின் விநாயகரை வழிபட்டு மும்முறை வலம் வந்து, சுயம்பு நாதர் ஆலயத்தை சுற்றி வந்து வணங்கி, முன்னோடியைத் தொழுது பிரம்மசக்தியம்மன், இசக்கியம்மாள் ஆலயங்களை வலம் வந்து சாஸ்த்தாவை வழிபடுவார்கள்.

    தெப்பக்குளம் அல்லது கிணற்று நீரில் நீராடி தூய ஆடை அணிந்து சுயம்பு நாதர் ஆயலத்தினுள் சென்று மூலஸ்தானத்தை மூன்று முறை வலம் வந்து அர்ச்சனை செய்து கொடி மரத்தைத் தொழுது பிரார்த்தனை செய்வார்கள்.

    குமரி மாவட்ட மக்கள் உவரியில் தங்குவ தற்கும்,சமையல் செய்து பரிமாறுவதற்கும், பாதுகாப்பிற்காகவும் மடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    நான்கு கால பூஜையும் முடிந்த பின் உற்சவ மூர்த்தி வீதிஉலா நடைபெறும்.

    இந்த நிகழ்ச்சி நிறைவு பெற்று உற்சவ மூர்த்தி ஆலயத்தினுள் எழுந்தருளும் போது விடியும் நேரம் ஆகிய விடும் அதன் பின் மக்கள் தங்கள் வீடுகளுக்குப் புறப்பட்டுச் செல்வர்.

    விசாகத்திற்கு மறுநாள் பவுர்ணமி ஆகும்.

    பெரும் பான்மையான மக்கள் உவரியில் பவுர்ணமி தீர்த்தமாடி சுயம்புலிங்க சுவாமியை வழிபடுவது வழக்கம்.

    பணங்கிழங்கும், வேர்க்கடலையும் வழியில் அதிகம் வாங்கிச் சாப்பிடுவர்.

    தங்கள் உறவினர்களை எல்லாம் கண்டு கடற்கரையில் அமர்ந்து பேசி மகிழ்வர்.

    வைகாசி விசாக திருவிழா முடிவில் ஒரு வருடத்திற்கான புண்ணியத்தை ஒரே நாளில் உவரியில் பெற்ற திருப்தி ஒவ்வொரு பக்தனுக்கும் உண்டாகும்.

    • இந்திரன் வைகாசி விசாகத்தன்று சுவாமிமலை முருகனை வழிபட்டு ஆற்றல் பெற்றான்.
    • இறை வழிபாடுகளுக்கு உகந்த மாதமாக திகழ்கிறது வைகாசி.

    1. வைகாசி விசாகம் முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகும். ஏனென்றால், அன்றைய தினம்தான் அவர் அவதரித்தார்.

    2. வைகாசி என்ற பெயரில் வட இந்திய புண்ணிய தலமான காசி பெயரும் வருவதால், அந்த மாதத்தில் காசிக்கு சென்று வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. காசிக்கு சென்று கங்கையில் புனித நீராட முடியாதவர்கள், தங்கள் பகுதியில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு.

    3. வள்ளலார் ராமலிங்க அடிகளார், வடலூரில் சத்தியஞான சபை என்னும் அமைப்பை வைகாசி மாதத்தில்தான் தோற்றுவித்தார்.

    4. வைகாசி பவுர்ணமி அன்று சிவபெருமானுக்கு மகிழம்பூ நிறத்தில் பட்டாடை சாற்றி, 108 பத்மராக கற்களால் ஆன மாலை அணிவித்து, எள் சாதம் நிவேதனம் செய்து வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

    5. காஞ்சி மகா பெரியவர் அவதரித்ததும் வைகாசி மாதமே!

    6. சென்னை திருமுல்லைவாயிலில் உள்ள மாசிலா மணீஸ்வரர் கோவிலில் வைகாசி பவுர்ணமி அன்று இறைவனும், இறைவியும், லிங்கத்தில் ஐக்கியமாகும் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    7. தென் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான அம்மன் கோவில்களில் இந்த வைகாசி மாதத்தில்தான் கொடை விழாக்கள் நடைபெறுகின்றன.

    8. இறை வழிபாடுகளுக்கு உகந்த மாதமாக திகழ்கிறது வைகாசி.

    9. இஷ்வாகு வம்சத்திற்குரிய நட்சத்திரமாக இருப்பதால் விசாகம் அமைந்துள்ள கோள் நிலையில் ராம-ராவண யுத்தம் நடந்ததாக ராமாயணம் கூறுகிறது.

    10. மணிபல்லவத் தீவில் தீவதிலகை என்ற காவல் தெய்வம் தோன்றி மணிமேகலையிடம் வைகாசிப் பவுர்ணமி அன்று கோமுகி என்ற பொய்கையில் அள்ள அள்ளக் குறையாத "அமுத சுரபி" என்னும் அட்சயப் பாத்திரம் வெளிவரும். உலக மக்களின் பசிப்பிணியை போக்கு வதற்காகவே இப்படிப்பட்ட அட்சயப் பாத்திரத்தை உனக்கு வழங்குகிறேன் என்று கூறி மறைந்தது. இதன்படியே மணிமேகலையும் புத்தர் பிறந்த வைகாசி முழுநிலவில் கோமுகி பொய்கையிலிருந்து வெளியே வந்த அட்சயப்பாத் திரத்தை எடுத்துக்கொண்டு புகார் நகருக்குத் திரும்பினாள்.

    11. ராஜஸ்தான் மாநிலத்தலைநகர் ஜெய்ப்பூரை அடுத்துள்ள பைராத் நகரின் எல்லையோரத்தில் ஓடும் பான் கங்கா நதிக்கரையில் அமைந்துள்ளது ராதாகிருஷ்ணன் கோவில். இங்கு ஆண்டுதோறும் வைகாசி பவுர்ணமி நாளில் பான்கா விழா நடக்கிறது. இந்நாளில் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பான் கங்கா நதியில் நீராடி பூஜைகளும் யாகங்களும் செய்து ராதாகிருஷ்ணனை வழிபடுவார்கள்.

    12. தெய்வங்கள் மற்றும் மகான்களின் அவதாரத் தொடர்புடன் கூடிய நட்சத்திரங்கள் மிகவும் சிறப்பாக கருதப்படுகின்றன. அவ்வகையில், வைகாசி விசாகம் பலராலும் பல தெய்வங்களுக்குரியதாகவும் கொண்டாடப்படுகிறது.

    13. முருகப் பெருமானுக்குரியதாக வைகாசி விசாகம் மிளிர்கின்றது. சிவ பெருமான் தாணு (மரமாக)வாக இருப்பதாகவும், அம்பிகை கொடியாக (அபர்ணா) இருப்பதாகவும், முருகப் பெருமான் விசாகமாக (கீழ் கன்றாக) இருப்பதாகவும் சோமாஸ்கந்த தத்துவம் விளக்கி கூறுகிறது.

    14. பழனி, திருச்செந்தூர், சுவாமிமலை போன்ற முருகன் திருத் தலங்களில் வைகாசி விசாகம் சிறப்பாக கொண்டாடப்படு கிறது.

    15. விசாகம் குருவிற்குரிய நட்சத்திரமாவதால் குருவிற்கு உரிய தலமான திருச்செந்தூரில் வைகாசி விசாகப் பெருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது.

    16. தெற்கு திசையின் அதிபதியும், மரண தேவதையுமான எம தர்மராஜனுக்குரியது வைகாசி விசாகமேயாகும். அன்று எம தர்மராஜனை வழிபடுவதால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.

    17. திருமழபாடி திருத்தலத்தில் மழுவேந்திய சிவபெருமான் திருநடனம் புரிந்த நன்னாள் வைகாசி விசாகமாகும்.

    18. பஞ்சபாண்டவரில் ஒருவரான அர்ச்சுனனுக்கு இறைவன் பாசுபதம் என்னும் ஆயுதம் வழங்கியதும் இந்நாளில்தான். இந்நாள் திருவேட்களம் என்னும் திருத்தலத்தில் பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது.

    19. ஆந்திர மாநிலத்தில் உள்ள சிம்மாசலத்தில் கோவில் கொண்டுள்ள வராக லட்சுமி நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாகம் சிறப்பான தினமாகும். சந்தனக் காப்புடன் ஆண்டு முழுவதும் காட்சி தரும் இந்த நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாக நாளில் சந்தனப் பூச்சைக் களைவார்கள். மூல விக்கிரகத்தின் இயற்கைத் தோற்றப்பொலிவு அன்று தரிசனமாகும். பின்னர் சுமார் 500 கிலோ சந்தனம் பயன்படுத்தி சந்தனப்பூச்சு செய்வார்கள்.

    20. கன்னியா குமரி அம்மனுக்கு 'ஆராட்டு விழா' இந்நாளில் சிறப்பாக கொண்டாடப்படு கிறது. சிறப்பாக சொல்லப்படும் காஞ்சி கருட சேவை, வைகாசி விசாகத்தை ஒட்டியே நடைபெற்று வருகிறது.

    21. திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் என்ற மகான் வைகாசி விசாகத்தில் சித்தியடைந்ததால் இந்நாளில் அவரது குருபூஜை திருப்போரிலுள்ள அவரது சமாதியில் விசேஷமாக நடை பெற்று வருகிறது.

    22. ராம-ராவண யுத்தத்தின் போது விசாகம் அமைந்துள்ள கோள் நிலையையும், அது காட்டிய நன்மை, தீமைளையும் மனதில் கொண்டே ராமன் போரிட்டு ராவணனை வதம் செய்து வெற்றி கொண்டார் என்பர்.

    23. ராஜராஜ சோழ மாமன்னரின் சரிதத்தை நாடகமாக ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருநாளில் நடத்திய நாடக கலைஞர்களுக்கு ஊதியமாக நெல் வழங்கிட ராஜேந்திர சோழன் வழங்கிய ஆணை, தஞ்சை பெரிய கோவில் வடக்குச் சுவரில் கல்வெட்டாக உள்ளது.

    24. திருச்சி அருகில் 'ஐயர் மலை' என்று வழங்கப்படும் வாட்போக்கி ரத்னாசலேஸ்வரர் (ரத்னகிரி) கோவில் கல்வெட்டில் வைகாசித் திருவிழா சிறப்பாக நடத்திட கோனேரின்மை கொண்டான் என்ற அரசன் நிலம் வழங்கியதை குறிப்பிடுகிறது.

    25. இந்திரன் வைகாசி விசாகத்தன்று சுவாமிமலை முருகனை வழிபட்டு ஆற்றல் பெற்றான்.

    • திருப்புகழ் பாடிப்பரவினார். எட்டு திருப்புகழ் பாடல்களை, முருகப் பெருமான் மீது பாடி இத்தலத்தில் அர்ப்பணித்தார்.
    • இன்று ‘வல்லக்கோட்டை’ எனப்படும் கோடை நகர், பெரும்புகழ் வாய்ந்த தலமாக விளங்குகிறது.

    ஆறுபடை வீடுடைய அழகிய குமரன், கோடை நகரிலும் கம்பீரமாக கொலுவிருக்கின்றான்.

    'எங்கே உள்ளது இந்த கோடை நகர்?' என்கிறீர்களா? நமது 'வல்லக்கோட்டை' திருத்தலத்தின் தொன்மையான திருப்பெயர்தான் கோடை நகர்.

    இத்தலம், காலத்தால் மிகத் தொன்மையானது, அருணாகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களை பெற்ற பெருமையுடையது.

    தனது பாக்களில் வல்லக்கோட்டையை 'கோடை நகர்' என்றுதான் குளிர் தமிழில் குறிப்பிடுகின்றார் அருணாகிரியார்.

    குமரன் குடிகொண்டுள்ள கோவில்களுக் கெல்லாம் சென்று 'திருப்புகழ்' பாடி மகிழ்வதைத் திருத் தொண்டாக செய்தவர் அருணகிரி.

    இவர் எந்த தெய்வத்திடமும் வெறுப்பில்லாத அத்வைத ஞானி.

    என்றாலும் முருகப் பெருமானிடம் மட்டுமே முதிர்ந்த காதல் உடையவர்.

    ஒரு சந்தர்ப்பத்தில் திருப்போரூர் வந்த அருணகிரியார், அங்கேயே தங்கி கந்தக் கடவுளுக்கு மலர்களாலும், மனம் மிகு பாக்களாலும் ஆராதனை நடத்தி வந்தார்.

    சில காலத்துக்குப் பிறகு திருத்தணி சென்று வேலவரை தரிசிக்க வேண்டுமென்ற ஆவல் உந்த, தணிகை நோக்கி பயணிக்க முடிவு செய்தார்.

    அன்றிரவு குமரன், அருணகிரிநாதரின் கனவில் தோன்றி, 'கோடை நகருக்கு வருக' என்று அழைப்பு விட்டான்.

    காலையில் எழுந்த அருணகிரி நாதர், தன்னை சொந்தம் கொண்டாடும் கந்தன் கருணையை எண்ணி கண்ணீர் மல்கினார்.

    உடனே வழி விசாரித்துக் கொண்டு கோடை நகர் வந்து சேர்ந்தார்.

    வள்ளியும்,தெய்வானையும் இரு புறத்திலும் விளங்க, சுமார் ஏழடி உயரத்துடன் காட்சி தரும் முருகப் பெருமானை கண்டு உள்ளம் உருகினார்.

    திருப்புகழ் பாடிப்பரவினார். எட்டு திருப்புகழ் பாடல்களை, முருகப் பெருமான் மீது பாடி இத்தலத்தில் அர்ப்பணித்தார்.

    இன்று 'வல்லக்கோட்டை' எனப்படும் கோடை நகர், பெரும்புகழ் வாய்ந்த தலமாக விளங்குகிறது.

    இங்கு வைகாசி விசாகப் பெருவிழாவை யொட்டி புஷ்பப் பல்லக்கில் சுப்பிர மணிய சுவாமி சேவை சாதிப்பார்.

    திருக்கல்யாண உற்சவம் நிறைவேறியதும் அதிகார மயில் சேவை நடைபெறும்.

    அனைவரும் வைகாசி விஜயனின் விவாகத் திருக்காட்சியையும், அதிகார மயில் புறப்பாட்டையும் கண்டு ஆனந்தத்தையும், அருளையும் பெறலாம்.

    • இது சங்க காலத்தைச் சேர்ந்தது.
    • சில முருகன் கோவில்களில், தெய்வத்தன்மை கொண்டதாக வேலுக்கு வழிபாடு நடத்தப்படுகிறது.

    கந்த புராணத்தில் முருகனுக்கும், சூரபத்மனுக்கும் இடையே நடந்த போரில், வேலைப் பயன்படுத்தி முருகன் சூரபத்மனைக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

    இதற்கு மேல் தப்பிக்க வழியில்லை என்ற நிலையில் அசுரன், முருகனின் கண்களில் படாமலிருக்க ஒரு பெரிய மாமரமாக மாறி விடுகிறான்.

    ஆனால் அவனது சூழ்ச்சியைப் புரிந்து கொண்ட முருகன் தனது வேலை எறிந்து மாமரத்தை இரண்டாகப் பிளக்க, அதில் ஒரு பாதி சேவலாகவும் மறுபாதி மயிலாகவும் மாறிவிடுகிறது.

    முருகன் மயிலைத் தனது வாகனமாகவும் சேவலைத் தன் கொடியாகவும் ஆக்கிக் கொள்கிறார் என்பது இப்புராணங்கள் கூறும் நிகழ்ச்சிகள்.

    இதனால் வீரத்தின் சின்னமான வேல், கொடியவர்களை அழித்து நல்லவர்களைக் காக்கும் சக்தியுடையது என்ற நம்பிக்கையை இந்துக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

    யௌதேயர் காலத்து நாணயத்தில் (கி.மு.200) வேல், சேவலுடன் காணப்படும் கார்த்திகேயன் படம் உள்ளது.

    மாமல்லபுரத்துக்கு அருகில் அமைந்துள்ள சாளுவன்குப்பத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட கல்லால் ஆன வேல்.

    இது சங்க காலத்தைச் சேர்ந்தது.

    சில முருகன் கோவில்களில், தெய்வத்தன்மை கொண்டதாக வேலுக்கு வழிபாடு நடத்தப்படுகிறது.

    முருகன் தன் தாய் பார்வதியிடம் இருந்து வேலைப் பெற்ற நிகழ்வாக, ஆண்டுதோறும் முருகன் திருத்தலங்களில் தைப்பூசத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

    இத்திருவிழாவின் போது பக்தர்கள் சிலர் தங்களது நாக்கு அல்லது கன்னங்களில் வேறுபட்ட அளவிலான வேல்களைக் குத்திக் கொண்டு கோவிலை நோக்கி ஊர்வலமாகச் செல்வார்கள்.

    இச்செயல் அலகு குத்துதல் எனப்படுகிறது.

    முருகனின் கையிலுள்ள வேலின் வடிவம், நமது அறிவு ஆழமானதாகவும், பரந்ததாகவும், கூர்மையானதாகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வண்ணம் நீண்ட அடிப்பாகத்தையும் மேல் பகுதியின் அடி அகன்றும் நுனிப்பகுதி கூர்மையானதாகவும் அமைந்துள்ளது என்று கருதப்படுகிறது.

    ×